திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, அரும்பாவி மலை எனும் ஆரமாமலை. இங்கு கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமணர்கள் வாழ்ந்தற்கான அடையாளமாக சுடாத செங்கற்களினால் செய்யப்பட்ட சில கற்படுக்கைகள், குகை ஓவியங்கள் காணப்படுகிறது.
இக்குகை அமைந்திருக்கும் பகுதிக்குச் செல்ல சில தூரம் பாறைகளிலேயே படிக்கற்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப்பாறை படிக்கற்களின் சில இடங்களில் மூலிகை அரைப்பதற்கான மூலிகை குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தரைமட்டத்திலிருத்து சுமார் 300 அடி தூரம் மலைப்பகுதிக்குச் சென்றவுடன் 200 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட பாறையின் அடிப்பகுதியில் பாறையை ஒட்டியபடி சுடாத செங்கற்களினால் சுவர் எழுப்பட்டு செம்மண்ணினால் பூசப்பட்டு அதற்குமேல் சுண்ணாம்பு பூசப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்குகைகளில் சமணர்கள் வாழ்தற்கான அடையாளமாக இருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட அறைகள், கற்படுக்கைகள் மற்றும் பாறையை ஒட்டியபடியே குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இம்மலையின் முற்கால பெயர் அறம்பாவித்த மலை என்பதாகும். காலப்போக்கில் அவை மாறி ஆரமாமலை என்று தற்போது அழைக்கபடுகிறது.
அதற்கு உதாரணமாக இக்குகைப் பகுதியில் மாணவர்களுக்கு கற்படுக்கையின் மீது ஆசான் அமர்ந்து கல்வி போதிப்பது போல் கற்படுக்கை ஒன்று உள்ளது. ஆனால், தற்போது அக்கற்படுகை சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இக்குகையின் முக்கிய சிறப்பம்சம் இக்குகைகளின் மேல்பகுதிகளில் வரைப்பட்ட அழகிய வண்ணம் மிகுந்த ஓவியங்களே ஆகும்.
இக்குகையில் வரைப்பட்ட ஓவியங்கள் அஷ்டதிக் பாலகர்கள் (எட்டு திசை) சிறப்பு பற்றி சித்தரிப்பதாகவும் இங்கு காணப்படும் ஓவியங்கள் சித்தன்னவாசல் ஓவியங்கள் போல் காணப்படுவதாக இங்கு ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தற்போது இக்குகைகளில் 10 விழுக்காடு ஓவியங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட இச்சமண குகைகள் மீண்டும் இப்பகுதிகளில் உள்ள சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டும், காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு மாடுகள் ஒய்வு எடுக்கும் அறையாகவும் மாறி வருகிறது.
மேலும் இக்கற்படுக்கைகள் உள்ள குகை அருகில் செடி கொடிகளினால் சூழப்பட்டு குகை இருப்பதற்கான அடையாளம் இல்லாமலும் மாறி வருகிறது. இந்நிலையில், கி.பி.எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இக்குகைகளில் தற்போது வரை சிலவற்றையாவது காண முடிகின்றது.
மேலும் இப்படி ஓர் சிறப்புமிக்க குகை ஓவியங்கள் மற்றும் கற்படுக்கைகள் காணப்படும் இப்பகுதியை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுச் செல்ல இக்குகைப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என தன்னார்வலர்கள், தொல்லியல் துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: திரைப்படமானது 'தி கேவ்' : 12 சிறுவர்கள் குகையிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம்!