திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த குட்டகந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமாவதி. விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வருமானம் பார்த்துவருகிறார். இந்நிலையில் இன்று (ஜூன் 30) வழக்கம்போல் மேய்ச்சலுக்காக பசுக்களை அவிழ்த்துவிட்டுள்ளனர்.
அப்போது குட்டகந்தூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டை வைத்து தூக்கி வீசியுள்ளனர்.
மேய்ச்சலில் இருந்த பசு, உணவு என நினைத்து மாங்கொட்டையை கடித்ததில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து பசு படுகாயமடைந்தது.
மேய்ச்சலுக்குச் சென்ற பசு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், பிரேமாவதி வனப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, பசு படுகாயங்களுடன் சோர்ந்து படுத்திருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரேமாவதி, இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டை வைத்து வீசிய அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.
ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகளைக் கடித்து கால்நடைகள் காயமடைவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுட்டகுண்டா மலைப்பகுதியில், தட்சணாமூர்த்தி என்பவரின் பசு இதேபோன்று படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
அடையாளம் தெரியாத நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’குடிக்க பணம் தா’ - மனைவியின் காதை அறுத்த மதுப்பிரியர்!