தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் நாள்தோறும் ஐந்தாயிரம் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஆறு ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா சிகிச்சையில் திருப்பத்தூரில் செயல்படும் சித்த மருத்துவ சிறப்புச் சிகிச்சை மையம் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 23) 45 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 349 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று மொத்தமாகக் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 969ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 320 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 57 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.