வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் நகராட்சி நிர்வாக துறையின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில், தற்போது பல மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பணிகள் முறையாக மேற்கொள்ளாதது குறித்து கேட்டதற்கு, கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் எடுத்தவர்களால் தவறு நடைபெற்றுள்ளது. அவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மறு ஒப்பந்தம் விட்டால் நிதி அதிகமாக வந்துவிடும். அதனால் இருக்கும் ஒப்பந்ததாரர்களை வைத்து பணிகளை முறையாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
மேலும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் கட்டாயம் பணம் செலுத்தி தான் ஆக வேண்டும். கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது. காரணம் நகராட்சிகளில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே பணம் இல்லாமல் உள்ளது. சிரமமாக இருந்தாலும் வியாபாரம் செய்பவர்கள் பணத்தை செலுத்திதான் ஆகவேண்டும். இதை தவிர்க்க முடியாது என்றார்.
அதேபோல் 234 தொகுதிகளிலும் மினி பிளே கிரவுண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவித்துள்ள அந்த பணிகள் ஆரம்பிக்கப்படும். அதேபோல நடைபெற்று வரும் மாநகராட்சி, நகராட்சி பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் வேலைவாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஜுன் 2023 ஐ இறுதி செய்து அதற்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.
தூய்மை பணியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை வாங்கி வருகிறோம். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளை சீரமைக்க கூடுதல் நிதி கேட்டுள்ளார்கள். இதற்காக 25 கோடி சிறப்பு நிதி முதலமைச்சரிடம் கேட்டு பெற்றுத்தரப்படும், விரைவில் வேலூர் மாநகராட்சி சாலைகள் சீரமைக்கப்படும் என்றார். மேலும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பேருந்து நிலையம் மீண்டும் நகராட்சிக்குள் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
இதையும் படிங்க: சென்னை கடற்கரை பகுதிகளில் 50.9 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்