திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், டெல்லி சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களில் இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் கரோனா பாதித்த நபர்கள் சார்ந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தனியார் கல்லூரி மண்டபத்தில் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கடந்த 10ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 51 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்ட நிலையில், டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய ஆத்துமேடு ஹாஜி தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 50.
இந்நிலையில், அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்ற அரசு அலுவலர்கள், தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உள்பட மூவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கரோனோ தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர்கள் வசிக்கும் பகுதியான ஆத்துமேடு ஹாஜி தெரு முழுவதும், நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தலைமையிலான அலுவலர்கள், கிருமிநாசினி மருந்து தெளித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் ஒரு மருத்துவர், இரு செவிலியருக்கு கரோனா தொற்று