திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜாப்ராபாத், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 8 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனை தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து, அந்த 8 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அவரவர் வீடுகளில் வைத்து தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அந்த எட்டு பேரில் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கரோனா உள்ள இருவர் உள்பட 8 பேர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி தனி பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த அவர்களின் 8 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆண்கள், 21 பெண்கள்,11 சிறுவர்கள் உள்பட 45 பேரை தனிமைப்படுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.
அதன் பேரில், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியன் தலைமையிலான வருவாய் துறையினர், காவல்துறையினர் அருகேயுள்ள தனியார் கல்லூரி, தனியார் மண்டபத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று பாதுகாப்பாக தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.