திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள பள்ளி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரிடம் குட்டகந்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தன்னுடைய 4 ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதனையடுத்து, 1 ஏக்கருக்கு 50 லட்சம் என விலை நிர்ணயம் செய்து முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் மகேஷிடம் கொடுத்துள்ளார். இதனிடையே தன்னுடைய சொத்து ஆம்பூரைச் சேர்ந்த மதன்லால் என்பவரிடம் விற்பனை ஒப்பந்தத்தில் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி மேலும் ரூபாய் 30 லட்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்துள்ளார் சுபாஷ்.
இதற்கு இடையில், ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் என்பவர் மகேஷின் 4 ஏக்கர் நிலத்தை தனக்கு விற்பனை செய்து தர வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், நிலத்திற்கும் அதிகப் பணம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக முன்பணம் கொடுத்த சுபாஷ் என்பவருக்கு எதையும் தெரியப்படுத்தாமல் அவருடைய நிலத்தை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரின் மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், முன்பணம் கொடுத்த தன்னுடைய நிலத்தை சுபாஷ் அளவிட வந்த போது அவரிடம் மகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இது குறித்து ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் வில்வநாதனுக்குத் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து வந்த வில்வநாதன், சுபாஷை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சுபாஷ் இது குறித்துக் கூறுகையில், தன்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும், நிலத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்த எம்எல்ஏ விஸ்வநாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மிரள வைத்த மிக்ஜாம் புயல்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர்!