திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட அக்ராகரம் கிராம ஊராட்சி செயலராக பூபதி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அக்ராகரம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கரோனா சிறப்பு மையம் உள்ளது.
இதில் ஊராட்சி செயலாளர் பூபதி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அக்ராகரம் ஊராட்சி பூங்கான் வட்டம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் முருகன்(43), அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது முருகனுக்கு கரோனா பரிசோதனை செய்து நான்கு நாள்கள் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதன்பின் முருகனுக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது.
இதில், ஆத்திரமடைந்த முருகன் தன்னை நான்கு நாள்கள் தனிமைப்படுத்திய பூபதியை தொலைபேசியின் மூலம் வெளியே வரும்படி அழைத்து, தான் மறைந்து வைத்து இருந்த கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய பூபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.