திருப்பத்தூர்: வேலூர் மாவட்டத்திலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று (ஜூலை 10) காலை சென்று உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பழனி மற்றும் நடத்துநர் கோபு குமாரும் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக 60 பயணிகளுடன் பெங்களூர் சென்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களா மேடு பகுதியில் பேருந்து ஓட்டுநர் பழனிக்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக ஓட்டுநர் பழனி, பேருந்தில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட நபர்களை காப்பாற்ற வேண்டும் என சுதாரித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: நிறுத்தியிருந்த லாரிகளில் 13 டயா்கள் திருட்டு; மற்றொரு லாரி ஓட்டுநா் கைது!
தனது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது என்பதை அறிந்த ஓட்டுநர் பழனி உடனடியாக தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்தி உள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த நபர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பின்னர் அங்கு வந்த சமூக ஆர்வலர் மயக்கத்தில் இருந்த ஓட்டுநர் பழனியை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் ஓட்டுநரின் உடல் நிலையை கருத்தில் கொண்ட போக்குவரத்து கழகம் மாற்று பேருந்தை ஏற்பாடு செய்தது. பின்னர், சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக மற்றொரு பேருந்தில் அனுப்பி வைத்தனர். பேருந்தை இயக்கிகொண்டிருக்கும் போதே ஏற்பட்ட மயக்கத்தையும் பொருட்படுத்தாமல் பேருந்தில் உள்ள பயணிகளுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திய ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Tenkasi: ஒரே நேரத்தில் 7 பேரை கடித்த வெறிநாய்; காயமுற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை!
இதேபோல் கடந்த மே 12ம் தேதி திருநெல்வேலியில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு பேருந்தை இயக்கி கொண்டிருக்கும் பொழுதே வலிப்பு ஏற்பட்டது. அப்பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்தனர்.
தனக்கு வலிப்பு ஏற்படுவதை அறிந்த ஓட்டுநர் கணேசன் உடனடியாக, பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தி உள்ளார். இதனால் 60 பயணிகளும் எந்த ஒரு காயங்கள் இன்றி பத்திரமாக மீட்கபட்டனர். பின்னர் ஓட்டுநர் கனேசன் பாளையங்கோட்டை மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் அரசு பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தினை நிறுத்திய சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
இதையும் படிங்க: பணியின் போது திடீர் வலிப்பு.. ஆனாலும் 60 பயணிகள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!