திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். தொழிலதிபரான இவர் பணிநிமித்தமாக நேற்று இரவு சென்னை சென்றுள்ளார். இதனால், யுவராஜின் மனைவி உஷா தனது இரு பிள்ளைகளுடன் அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு (டிச.11) வீட்டின் முன்பக்க கதவின் பூட்டினை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை திறந்து 8 சவரன் தங்க நகை , ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்ஃபோன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை உஷா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் வைத்திருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து உஷா ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல்துறையினர் போல் நடித்து வீடு புகுந்து கொள்ளை!