திருப்பத்தூர்: கடந்த கிராம சபை கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானங்களை எதையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில், வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சியில் நேற்று (அக்.2) நடந்த கிராம சபைகூட்டத்தை அப்பகுதியினர் புறக்கணித்தனர். மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, ஊராட்சி மன்ற தலைவர் அமீர் பாஷா தலைமையில் இந்த கிராம சபை கூட்டம் தொடங்கப்பட்டது.
அப்போது அப்பகுதியினர் கடந்த கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. சாலை மற்றும் கால்வாய் வசதிகள் அமைத்து தர வேண்டும். 3 ஆண்டுகளாக துணை சுகாதார நிலையத்திற்குள் மழைநீர் புகுந்து வருகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து உரிய விசாரணை நடத்தும் வரை கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை நடத்தவும் அனுமதிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற கிராமிய போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அப்பகுதி மக்கள் சபை கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.
இதையும் படிங்க: பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிராக கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்!