கொத்தடிமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட தொழிலாளர் துறை சார்பாக ஆட்சியர் சிவனருள், மாவட்டத்தில் உள்ள நிர்வாக அமைப்புகளை சேர்ந்த அலுவலர்களுடன் இன்று(பிப்.9) உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
அப்போது "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலையை சுமத்துதல், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்தல் உள்ளிட்ட தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ள அனைத்தையும் களைந்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என ஆட்சியர் அலுவலகத்தில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் தொழிலாளர் துறை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு காவல்துறை, கொத்தடிமை முறை ஒழிப்பு கண்காணிப்பு குழு ஒன்றிணைந்து 'யார் கொத்தடிமை' என்கிற தலைப்பில் கொத்தடிமை என்பதற்கான விளக்கங்களையும் மாவட்ட கண்காணிப்பு குழு செய்யும் பணிகளையும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், அமலாக்கப் பிரிவின் தொழிலாளர் உதவி ஆணையர்கள், மாவட்ட, கோட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள், காவல் நிலைய அலுவலர்கள், வழக்கறிஞர்கள் போன்ற மாவட்ட நிர்வாக அமைப்புகளை சார்ந்த அனைவரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... சர்வதேச அடிமை முறை ஒழிப்பு நாள் : இந்தியாவில் அடிமைத்தன முறையை ஒழிக்க செய்யப்பட வேண்டியவை!