திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்திந்த அவர் பேசியதாவது, ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,000 வாக்குகள் பெற்று மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வெற்றி என்பது அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பாசிசம் அல்லாத திராவிடம் இன்னும் மேலாங்கி இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் மின் இணைப்பிற்கான ஆதார் அட்டையை இணைக்கும் பணி கடந்த 28ஆம் தேதியோடு முடிந்துவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
அதில் இன்னும் பலர் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்காமல் இருக்கின்றனர். இதைப் பயன்படுத்தி இலவச மின்சாரம் அல்லது குறைந்தபட்ச 100 யூனிட் இலவச மின்சாரம் வீடுகளுக்கு வழங்கப்படுவதை ரத்து செய்கின்ற எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்று தமிழக அரசை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் ஆதார் இணைப்பு அவசியம் என்றால், இன்னும் அவகாசம் கொடுத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதாரை இணைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.
கரோனா தொற்றுக்குப் பிறகு பொருளாதாரம் இன்னும் சீரடையவில்லை, அதற்குள் ஒன்றிய அரசு கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது; கேஸ் சிலிண்டரை பாஜக அரசு வருவதற்கு முன்பாக 450 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருந்தோம். தற்போது 1200 ரூபாய்க்கு வாங்குகின்றோம். மத்திய அரசினுடைய இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. விலை உயர்வினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதனை திரும்பப் பெற வேண்டும்.
மேலும் ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுகவில் ஒற்றுமை இல்லாத நிலை இருந்தது, அதிமுகவிற்கு பாஜக ஓட்டு சேகரிக்கவில்லை. இதனால் மிகப்பெரிய பின்னடைவை அதிமுக சந்தித்துள்ளது. தமிமுன் அன்சாரி எங்களுடைய கட்சியில் உறுப்பினராக இருந்தவர், மேலும் சிறப்பாக செயல்பட்டவர். சமீபத்திலே சில மாவட்ட தலைமை நிர்வாகிகளுக்கிடையே கருத்து மோதலை கொண்டிருந்தார்.
அவருடைய நடவடிக்கையில் பலருக்கு அதிருப்தி நிலவியது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 28ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுகுழுவில் தமிமுன் அன்சாரியை ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளோம். தற்போது நான் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் உள்ளேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: மெகா வேலைவாய்ப்பு - இளைஞர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!