திருப்பத்தூர் மாவட்டம், பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர், வழக்கறிஞர் ரவிக்குமார். இவரது சகோதரர் ராஜேந்திரன் (52) என்பவர் நெய்வேலியில் முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றி, பணிச்சுமை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இந்துமதி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்துவிட்டார், ராஜேந்திரன். மேலும், அதே பகுதியில் இருந்த சாந்தி (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் திருமணம் செய்துகொள்ளாமல், திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி ராஜேந்திரன் திடீரென்று உயிரிழந்தார்.
மாரடைப்பு காரணமாக ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ரஜேந்திரனின் உடல் சொந்த ஊரான திருப்பத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
ரஜேந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டு ஐந்து நாள்கள் ஆன நிலையில், அவரை சொத்துக்காக சாந்தி கொலை செய்துள்ளார் என்றும்; அவரது உடலைத் தோண்டி மீண்டும் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் ராஜேந்திரனுடைய மகன் வினோத், சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இது குறித்து ராஜேந்திரனுடைய தம்பி வழக்கறிஞர் ரவிக்குமார் கூறுகையில், "என்னுடைய அண்ணன் பொறியாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்று, தனது ஓய்வு காலத்தை திருப்பத்தூரில் கழிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
ரஜேந்திரனுடன் இருந்த சாந்தி என்பவர் பல லட்ச ரூபாயை அவரிடமிருந்து பெற்று அனுபவித்துள்ளார். தற்சமயம் அண்ணன் திருப்பத்தூருக்கு வந்து வாழ நினைத்ததால், எங்கு தனக்கு கிடைத்த இந்த வாழ்க்கை பறிபோய்விடுமோ, சொத்துக்களை இழக்க நேரிடுமோ என்கிற பயத்தில் அண்ணனிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
அவருடைய ஆசைக்கு இணங்காத அண்ணனை கடைசி நேரத்தில் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்ததால், அண்ணனுடைய உடலை மீன்டும் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்" என்றார்.
அதன்படி திருப்பத்தூர் வட்டாட்சியர் உத்தரவின்படி ராஜேந்திரனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, சிறப்பு மருத்துவர் நாகேந்திர குமார், மற்றும் பிரபு ஆகியோர் முன்னிலையில் மயானத்திலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
முன்னதாக, உடற்கூறாய்வு நடத்தப்பட்டபோது செய்தியாளர்களை காணொலிப் பதிவு செய்யவிடாமல், காவல் துறையினரே காணொலிப் பதிவு செய்ததாகவும்; ஆனால், காவல் உதவி ஆய்வாளர் கவனக்குறைவால் அந்தக் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் புகார் செய்த 2ஆவது மனைவியை குத்திக்கொன்றவர் கைது!