திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அண்ணாநகர் பகுதியில் வைத்தீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் தரைத்தளத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று (16.08.20) வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை அடைத்து முதல் தளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார்.
அப்போது நள்ளிரவில் அடையாளம் தெரியாத போதை ஆசாமி ஒருவர் கடையை நோட்டம் விட்டு கடையின் கதவை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் கதவை உடைக்க முடியாததால், முதல் தளத்தில் உள்ள வைத்தீஸ்வரனின் வீட்டிற்கு சென்று பால்கனியில் அமர்ந்து ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயற்சிக்கும் போது போதை குறையக்குறைய தனது பாக்கெட்டில் இருக்கும் ஒயிட்னர் கொண்டு துணியில் வைத்து நுகர்ந்து போதை ஏற்றி கொண்டு, மீண்டும் ஜன்னலை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் தொடர்ந்து முயன்று ஜன்னலை உடைத்து ஜன்னலின் பின்பக்கத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியை நகர்த்த முடியாமல் ஏமார்ந்து திரும்பியுள்ளார். தற்போது இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் வெளியகியுள்ளன.
மேலும் இச்சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சி உதவியுடன் அந்த போதை ஆசாமியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பல கோடி மதிப்பிலான 25 கிலோ ’செரஸ்’ வகை கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!