திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிற்குள்பட்ட ஜவ்வாது மலை மீது உள்ள புதூர் நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல் நாடு, ஏலகிரி மலைப் பகுதிகளில் 46 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்கள் அனைவரும் பழங்குடியின இந்து மலையாளி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த காலங்களில் ஜவ்வாது மலை, ஏலகிரி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்பட்டுவந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மலைவாழ் மக்களுக்கு முறையான சாதி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் மலைவாழ் மக்கள் மனு அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 10) திருப்பத்தூர் சார் ஆட்சியர் முனீர் முன்னிலையில் மழைவாழ் மக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் அரசு அலுவலர்கள் அளித்த வாக்குறுதி ஏமாற்றம் அளிப்பதாக கூறி நாளை (நவம்பர் 11) முதல் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை ஒப்படைப்பது, சாலை மறியல் போராட்டம், மலைவாழ் மாணவர்கள் பள்ளிகளைப் புறக்கணித்து வேளாண் பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதாக மலைவாழ் மக்கள் போராட்டக்குழு சார்பில் தெரிவித்துள்ளனர்.