திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த குண்டுரெட்டிமேடு பகுதியைச்சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் மனைவி லட்சுமி, மகன்கள் விஜயன் (60) மற்றும் பாண்டுரங்கன் (64) ஆவர். சாம்ராஜ் ஏற்கெனவே இறந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு லட்சுமி இறந்துவிடுகிறார்.
இந்நிலையில் பாட்டியின் மரணம் காரணமாக பாண்டுரங்கனின் மகன் அருள் வெளிநாட்டில் வேலையில் இருந்துவிட்டு ஊருக்கு வருகிறார். இந்த நிலையில் லட்சுமிக்குச்சொந்தமான 12 சவரன் தங்க நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணத்தை தனக்குச்சொந்தம் எனக்கூறி அருள் எடுத்துக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து விஜயன், தன்னுடைய அம்மாவின் தங்க நகையை ஏன் எடுத்துச்செல்கிறாய்; அது தனக்கும் சொந்தம் எனக்கூறி அண்ணன் மகன் அருளிடம் பணத்தையும் தனக்கு உரிய நகைகளையும் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அருள், தனது சித்தப்பாவான விஜயனையும் தகாத வார்த்தையில் பேசியும் ’நகையையும் பணத்தையும் தர முடியாது; உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்’ என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த விஜயன் குண்டுரெட்டி மேடு பகுதியில் உள்ள மின்கடத்தி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் நாட்றம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் விரைந்து வந்து விஜயனிடம் சமாதானப்படுத்தி, பின்னர் அவரை கீழே இறக்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:பேராசிரியர் தகுதி தேர்வில் தோல்வி... விரக்தியில் இளைஞர் தற்கொலை