தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க அரசு மே 10ஆம் தேதி முதல் 14 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில், கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து கடைகளும் இயங்க அனுமதி அளித்திருந்தது. ஆனால், வங்கிகள் இயங்காத காரணத்தினால் வங்கிகளின் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் மக்கள் பலரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என சுமார் 15-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் இயங்கி வருகின்றன. இவை கடந்த சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் விடுமுறை காரணமாக இயங்கவில்லை.
இந்த வங்கிகளின் சார்பில் ஆம்பூர் நகர் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏடிஎம் மையங்களில் கடந்த இரண்டு தினங்களாக பணம் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க கையில் பணம் இல்லாததால் ஏடிஎம் மையங்களை நாடிச் சென்ற பொதுமக்கள், அங்கும் பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த நிலையில், வங்கிகளுக்கு செல்ல முயற்சித்தாலும் சர்வர் கோளாறு காரணமாக வங்கியிலும் பணம் பெற சிக்கல்கள் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தங்களின் சொந்த பணத்தை வங்கிகளில் செலுத்திவிட்டு அவசர தேவைக்காக அதனை எடுக்க முற்படும்போது இவ்வாறு வங்கிகளில் சர்வர் பழுதாகியதாலும், ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததாலும் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆகையால் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப வங்கி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.