திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 50). இவருடைய மனைவி கலைவாணி (வயது 32). இவர்களுக்கு 4 மற்றும் 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த 3 மாதத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டு உடல்நிலை சரி இல்லாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து, ஐந்து மாத காலமாக தொடர் சிகிச்சையில் அந்த பெண் குழந்தை இருந்துள்ளது. பின்னர் நோய்த் தொற்று அதிகமான காரணத்தால் தீவிர பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கச் சென்றனர்.
அப்போது அந்த பெண் குழந்தை தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் அப்படித் தொடர் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக ஒரு மாதத்திற்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் சிகிச்சைக்காக செலவானதாக கலைவாணி தெரிவித்து உள்ளார்.
எனவே குழந்தையின் தந்தையான ராமமூர்த்தி, தனது சொந்த ஊரில் இருந்து வேலை செய்தால் தனது குழந்தையை காப்பாற்ற முடியாது எனக் கூறி வெளியூருக்கு வேலைக்குச் சென்று தற்போது வரை குழந்தையின் சிகிச்சைக்காக பணம் அனுப்பி வருகிறார். மேலும், குழந்தையின் சிகிச்சைக்கு தற்போது வரை சுமார் 20 லட்ச ரூபாய் செலவு செய்திருப்பதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, வீட்டிலேயே குழந்தைக்கு உண்டான ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் அனைத்து விதமான மருத்துவ கருவிகளையும் வாங்கி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாதத்திற்கு நான்கு முறை வேலூரில் சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைக்கும் சென்று வருகின்றனர்.
இது குறித்து குழந்தையின் தாய் கலைவாணி, "தனது குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படுவதை தன்னால் பார்க்க முடியவில்லை என கண்ணீர் மல்க கூறினார். மேலும் தனது குழந்தை இதுபோல் அவதிப்படுவதை எங்கள் குடும்பத்தினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் தமிழக அரசோ அல்லது மாவட்ட நிர்வாகமும் தனது குழந்தைக்கு உயிர் பிழைக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தென்காசியில் இருந்து சூரியனுக்கு புகழை எடுத்து சென்ற பெண் விஞ்ஞானி.. பெருமிதத்தில் சகோதரர்!