திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், தினேஷ் குமார்(35). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில், அதே கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்க வீராங்குப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் திவ்யாவின் கணவர் ஜானகிராமன் என்பவரிடம், தினேஷ் குமார் இடம் வாங்க பல்வேறு இடங்களில் கடன் வாங்கி சுமார் 8 லட்சம் ரூபாயை கடந்த 4 மாதங்களுக்கு முன் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜானகிராமன் பணத்தைப் பெற்று பத்திரப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததால் தினேஷ் கடனாக வாங்கிய பணத்திற்கு இடமும் வாங்க முடியாமல், வட்டியும் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் நான்கு மாத காலம் ஆகியும் இடத்திற்கு பத்திரப்பதிவு செய்யாமல் இருந்த ஜானகிராமனிடம், தினேஷ் குமார் பத்திரப்பதிவு செய்து தரும்படி கூறியுள்ளார். ஆனால், ஜானகிராமன் தினேஷ்குமாரை பணம் கொடுக்க முடியாது எனவும், சாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளாலும் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தினேஷ்குமார் வாட்ஸ்அப் மூலம் வீராங்குப்பம் கிராம இளைஞர்களுக்கு, ஜானகிராமன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அன்பு மனைவி மன்னித்து விடு எனவும், தன் மனைவியை யாரும் திட்ட வேண்டாம் என்றும் கூறிவிட்டு, காவல்துறையினர் அவர்களுக்கு எனது மரணத்திற்கு ஜானகிராமன் தான் காரணம் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை முயற்சி செய்து, அதனை புகைப்படமாக எடுத்து ஊர் இளைஞர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக தினேஷ்குமாரின் வீட்டிற்கு வந்த இளைஞர்கள் மயங்கிய நிலையில் இருந்த தினேஷ்குமாரை மீட்டு இருசக்கர வாகனத்தில் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து அறிந்த உமராபாத் காவல்துறையினர் இந்நிகழ்வு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து வீராங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஜானகி ராமனிடம் கேட்டபோது, "தினேஷ்குமார் வாங்கிய இடத்தின் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதாகவும், அதனால் அவரிடம் மேலும் பணம் கேட்டதாகவும், உடனடியாக தினேஷ்குமார் நிலம் வாங்க கட்டிய பணத்தை கொண்டு பத்திரவுப் பதிவு செய்து தருவதாகவும்" தெரிவித்துள்ளார்.