திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இவர் வழக்கம்போல் இன்று (மே 4) தனது சைக்கிளில் பணிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சின்ன கொம்மேஸ்வரம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்,விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.