திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ஆயிஷா-பி நகரைச் சேர்ந்தவர் ஷமீல் அகமது. காலணி தொழிற்சாலை ஊழியரான இவருக்கும், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் நாள் ஆயிஷா-பி நகரிலுள்ள வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஷமீல் அகமதுவின் முகத்தில் அடையாளம் தெரியாத நபர் அமிலத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதனால் காயமடைந்த ஷமீல் அகமது, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இளைஞர் மீது சந்தேகம்
இது குறித்து ஷமீல் அகமதுவின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அமிலம் வீசிச் சென்ற நபரைத் தேடிவந்தனர். இதையடுத்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஷமில் அகமதுவிற்கும், நிச்சயம் செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையில், காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்தின்பேரில் மணப்பெண்ணின் உறவினரான பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுபேர் அகமது என்ற இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உண்மை அம்பலம்
விசாரணையில், திருமணம் முடிந்த இளம்பெண்ணை சுபேர் ஒருதலைபட்சமாக காதலித்துவந்துள்ளார். இதனை அப்பெண்ணிடம் தெரிவித்தபோது, சுபேரின் காதலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இளம்பெண்ணிற்கு நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்திவிட்டால், தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று எண்ணிய சுபேர், நிச்சயம் செய்யப்பட்ட ஷமீல் அகமது முகத்தில் அமிலம் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து சுபேர் அகமது மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கணவரின் ஆசிட் வீச்சில் மனைவி உயிரிழப்பு