திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் பகுதியைச் சேர்ந்த மாமலைவாசன், ராமநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோரின் வீடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளையில், நகை, பணம் கொள்ளை போனதாக அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவலர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில், தும்பேரி கூட்டுச்சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக இரண்டு பைக்குகளில் சென்ற நான்கு பேரை நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள்தான் அம்பலூர், ராமநாயக்கன் பேட்டை பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்த நபர்கள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (28), சிக்கனாங்குப்பத்தைச் சேர்ந்த அபினேஷ் (19), காமேஷ் (19), வினோத் குமார் (19), அரபாண்டகுப்பத்தைச் சேர்ந்த சக்திவேல் (24), பசுபதி (24), முரளி (26) புத்துகோவிலைச் சேர்ந்த லோகு (19) ஆகிய எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 11 சவரன் தங்க நகை, இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரையும் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காருடன் எரித்துக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்: தெலங்கானாவில் கொடூரம்!