திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் செயலாளர் தர்மேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள், பயனாளிகள் என திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 17.33 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது, “கருணாநிதி ஆட்சியில்தான் அனைத்து மகளிர் மன்றங்களுக்கும் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காகவும், விவசாயிகளின் வசதிக்காகவும்தான் இந்த கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், நான் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் கூட்டுறவுச் சங்கங்களில் இருந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு மனைவி மீதான வழக்கு; உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!