திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நரியம்பட் பகுதியில் இயங்கிவரும் அரசு அங்கன்வாடி மையத்தில் இன்று (டிசம்பர் 9) மதியம் பல்லி விழுந்த உணவை உட்கொண்ட ஐந்து குழந்தைகளுக்கு திடீரென உடல் உபாதை, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தைகளுக்கு நரியம்பட் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டுசென்றபோது, அவசர ஊர்தி திடீரென பழுதாகியது. இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா, ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் குழந்தைகளிடம் நலம் விசாரித்து.
பின்னர் செய்தியாளர் சந்தித்த ஆட்சியர் கூறியதாவது, “நரியம்பட் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் செய்த பின் கடைசி நேரத்தில் உணவில் சிறு பல்லி விழுந்துள்ளது. 24 பேர் அங்கிருந்த நிலையில், 5 குழந்தைகள் மட்டும் உணவு உட்கொண்டபோது, இவ்வாறு ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு 24 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர். இதேபோன்று கடந்த மாதம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை உட்கொண்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: lizard inside sealed Packet: பிரபல நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட்டில் பல்லி... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்!