ஏலகிரி: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலா தளமான 'ஏழைகளின் ஊட்டி ஏலகிரி' என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை பகுதியில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏராளாமான குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் துவங்கும் நிலையில் சென்னை, பெங்களூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு தங்களது குடும்பத்தினர் வருகை தந்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்நிலையில் வேலுார், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுமார் 20 பேர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஏலகிரி மலைக்கு மினி வேனில் சுற்றுலா வந்தனர். மினி வேனை ராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் என்பவரின் மகன் சந்திப்குமார் (வயது 34) ஓட்டிச் சென்றார்.
ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நேற்று (மார்ச்.5) மாலை 7 மணியளவில் மலை உச்சியில் இருந்து சுற்றுலா பயணிகள் கீழே இறங்கி உள்ளனர். அப்போது 4 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அவர்கள் பயணித்த வேன் பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
![ஏலகிரி மலையில் வேன் கவிழ்ந்து விபத்து: 17 பேர் உயிர்த் தப்பிய நிலையில் 3பேர் காயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-05-yelagiri-accident-scr-pic-tn10018_05032023215714_0503f_1678033634_1005.jpg)
இந்த விபத்தை, அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவ்வழியாக சென்ற மற்றொரு வேனில் இருந்தவர்கள் விபத்துள்ளானவர்களை மீட்டு காப்பாற்றினர். இதில் வாலாஜா குடிமல்லுார் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம், அவரது மனைவி சாந்தி(65), காட்பாடி தொப்பலாம் மோட்டூரைப் பகுதியைச் சேர்ந்த நடராஜ், அவரது மகன் ராம்குமார் மற்றும் ஏகாம்பரம் மகன் எம்பெருமாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
![ஏலகிரி மலையில் வேன் கவிழ்ந்து விபத்து: 17 பேர் உயிர்த் தப்பிய நிலையில் 3பேர் காயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-05-yelagiri-accident-scr-pic-tn10018_05032023215714_0503f_1678033634_185.jpg)
மீதமுள்ள 17 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அங்கு விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்துார் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விபத்தினால் ஏலகிரி மலைக்கு செல்லும் மற்றும் இறங்கும் பயணிகள் வாகனங்கள் இரு புறமும் நீண்ட தூரம் நின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தொடர்ந்து, ஏலகிரி மலை போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் விபத்துக்குள்ளான வேனை சாலையின் ஓரத்தில் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள்! கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பெண் பலி!