திருப்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட சிவராஜ் பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு நிவர் புயலால் பெய்த கனமழையின் காரணமாக இரண்டு ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட அலுவலர்கள் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள பள்ளியில் தங்கவைத்தனர். பின்னர் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை திருப்பத்தூர் சார் ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண பொருள்களை வழங்குமாறு வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் திருப்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட அண்ணா நகர், கலைஞர் நகர், பெரியார் நகர், கௌதம பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது. புதுப்பேட்டை ரயில்வே தரைப்பாலம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதனை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர், நகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
மழைக்காலங்களில் மக்கள் பாதிப்படைய கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சிவனருள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆனாலும் அலுவலர்கள் சரியாகப் பணியாற்றவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: புயல் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!