திருப்பத்தூர்: ஸ்கேர்ட் ஹார்ட் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி.17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘போத்தராஜா’ சிற்பம் கண்டறியப்பட்டது. இது குறித்து முனைவர் பிரபு கூறுகையில்,”திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே உள்ள திரெளபதியம்மன் கோயில் வளாகத்தில் பழமையான ‘போத்தராஜா’ சிற்பம் கண்டறியப்பட்டது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் திரெளபதியம்மன் கோயிலும், வழிபாடும் பரவலாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் திரெளபதியம்மன் கோயில்களின் எதிரே போத்தராஜா சிற்பம் காணப்படும்.
போத்தராஜா:
திரெளபதியம்மன் கோவில்களில் காவல் தெய்வமாக ‘போத்தராஜா’ சிற்பம் வழிபடப்படுகிறது. மகாபாரதத்தில் பகாசூரனின் பேரனும் பிரம்மனிடம் பிரத்யேக வரத்தைப் பெற்றவனுமான தசசதாசூரன் (தசம் - 10, சதம் - 100, 10X100 =1000) என்ற அரக்கனை திரெளபதி அழிக்க முற்படுகிறார். அரக்கனது ஆயிரம் தலைகளில் ஏனைய தலைகளை வெட்டி அழித்த பின்னர் கடைசித் தலையை வெட்டும் போது அது தரையில் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் வெட்டப்பட்ட அவனது தலைகள் மீண்டும் உயிர் பெறும் என்ற நிலை வருகையில் அரக்கனது கடைசித் தலையினைக் கீழே விழாமல் பிடித்து அழிக்கக் காரணமாக இருந்தவரே ‘போத்தராஜா’ ஆவார். எனவேதான் போத்தராஜா சிற்பமானது இடதுகையில் ஒரு தலையுடனும் வலது கையில் வாளுடனும் காணப்படும். சில இடங்களில் இடது கையில் மனித தலையும், சில இடங்களில் ஆட்டின் தலையும், எருமையின் தலையும் காணப்படும்.
வெங்களாபுரத்தில் உள்ள போத்தராஜா சிற்பமானது 3அடி உயரமும் 2 ½ அகலமும் கொண்டு புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கின்றது. ஒரு பீடத்தில் போத்தராஜா நின்றவாறு, தமது வலது கையில் வாளினையும் இடது கையில் ஆட்டின் தலையினையும் ஏந்தியவாறு காணப்படுகின்றார். பின்னலிடப்பட்ட தலைமுடியானது தொடை வரை நீண்டு வளர்ந்துள்ளது. சிற்ப வேலைப்பாடுகளை ஒப்பிடும் போது கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன சோழர் கால சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு