திருப்பத்தூர் மாவட்டம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் ஸ்ரீ ஸ்நாதன தர்ம தியான மையத்திற்குச் சொந்தமான தேவி கருமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்குச் சொந்தமான 170 கிலோ எடையுள்ள இரண்டரை அடி கொண்ட பஞ்சலோக அம்மன் உற்சவர் ஐம்பொன் சிலைகள், பூஜைப்பொருள்களை இக்கோயிலின் நிர்வாகியான ராகவேந்திரன் என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக மாதனூர் அடுத்த தேவிகாபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று (டிச.21) காலை 10 மணியளவில் ராகவேந்திரன் உடல் நலம் சரியில்லாத தனது தாயாரை குடியாத்தம் அருகேயுள்ள தனது தங்கையின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
![ஆம்பூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-07-idol-robbery-vis-scr-pic-tn10018_21122020233819_2112f_03733_349.jpg)
பின்னர் மாலை 6 மணியளவில் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உள் அறையில் பூட்டி வைத்திருந்த 10 லட்சம் மதிப்பிலான இரண்டரை அடி உயரம் கொண்ட 170 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஐம்பொன் சிலை, கோயிலுக்குச் சொந்தமான பூஜைப்பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
![ஆம்பூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-07-idol-robbery-vis-scr-pic-tn10018_21122020233819_2112f_03733_318.jpg)
இதுகுறித்து ராகவேந்திரன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: புதிய வடிவில் கரோனா: புதிய கட்டுப்பாட்டுகள் விதித்த ஏர் இந்தியா!