வேலூர்: வேலூர் மாவட்டம், பாக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது மகள் மோனிகா ஆம்பூர் அருகே சின்ன பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களாக மஞ்சள் காமாலை மற்றும் வலிப்பு நோயால் மோனிகா அவதிப்பட்டு வந்துள்ளார்.
இன்று காலை மோனிகா, அவரது தாத்தா மற்றும் பாட்டி மூவரும் இணைந்து பேரணாம்பட்டு பகுதியில் உள்ள சாமியார் ஒருவரிடம் ஜோசியம் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். பிறகு வீடு திரும்புவதற்காக ஆம்பூர் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது திடீரென மோனிகாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறிது விநாடிகளில் மயங்கி விழுந்த அவரை தாத்தா, பாட்டி மற்றும் பொதுமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி மோனிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.