தூத்துக்குடி: ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். பாலன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ரம்மி விளையாட்டில் ஏற்கனவே ரூபாய் 3 லட்சத்தை இழந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் பாலனின் தந்தை ஆவுடையப்பன் பாலனிடம் ரூபாய் 50 ஆயிரத்தைக் கொடுத்து வங்கியில் செலுத்த கூறியுள்ளார்.ஆனால் பாலன் இந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு பணத்தை இழந்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த பாலன் நேற்று தனது நண்பர் செல்போனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 50 ஆயிரத்தை இழந்துவிட்டேன். எனவே எனது முடிவை நானே தேடிக் கொள்கிறேன் என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தனது வீட்டில் தனி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாலனின் தந்தை ஆவுடையப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் பாலன் உடலை மீட்ட தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் பாலனின் செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அரசு மசோதா நிறைவேற்றியும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: Transgenders Protest: 'சாப்பிடக் கூட வழியில்லாத நிலை' - தூத்துக்குடியில் திருநங்கைகள் முற்றுகை