கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையைச் சேர்ந்தவர் கட்டபொம்மன். இவருடைய மனைவி ராமலட்சுமி. இந்தத் தம்பதிக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். கட்டபொம்மனும் ராமலட்சுமியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். பிரபாகரனுக்கு திருமணமாகி உமா லட்சுமி என்ற மனைவியும், கார்த்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
பிரபாகரன் தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு உள்ளார். அவர் சொத்தில் பங்கு தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிரபாகரன் கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் பிரபாகரன் தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதை அங்கு பணியில் இருந்த காவலர்கள் பார்த்து தடுத்து நிறுத்தினர். பின் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு பிரபாகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தந்தை சொத்தில் பங்கு தராத காரணத்தினால் மகன் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.