2020-21ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதில் கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, நீர்நிலை, பொருளாதாரம், விவசாயம், தனிநபர் வருமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதில் ஆதிச்சநல்லூரில் உலக தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பும் ஒன்றாகும். இதுகுறித்து ஆதிச்சநல்லூர் அகழாய்வு எழுத்தாளரான முத்தாலங்குறிச்சி காமராசு நமது ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில் உலக நாகரிகத்தின் தொட்டில் ஆதிச்சநல்லூர் என தெரிவித்தார். மேலும் இந்தியாவிலேயே முதல்முதலாக அகழாய்வு நடைபெற்ற இடம் ஆதிச்சநல்லூர் என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “1867ஆம் ஆண்டில் ஜாஹுர் எனும் ஜெர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர் ஆதிச்சநல்லூருக்கு வந்து ஆராய்ச்சி செய்தார்.
அந்த ஆராய்ச்சியில் கிடைத்த பொருள்களை எல்லாம் அவர் ஜெர்மன் நாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அதன் பிறகு இந்த நாகரீகம் ஆய்வு செய்யப்படவில்லை.
தொடர்ந்து 1902ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ரியா என்பவர் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வெண்கலப் பொருள்கள், மண்பாண்டங்கள், மண்பாண்டங்களை வைக்கக்கூடிய ஜாடிகள், கத்தி, கோடாரி, இரும்பு, பொன் பட்டயங்கள் போன்ற பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட பொருள்களை எல்லாம் 21 மாட்டு வண்டிகளில் ஏற்றிச் சென்று சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் என்னென்ன பொருள்கள் இருந்தன என்பதை முதல்முதலாக பட்டியலிட்டுச் சொன்னவர் அலெக்சாண்டர் ரியாதான்.
பிற்காலத்தில், தமிழ்நாட்டில் 37 இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் பட்டியலிட்டார். இந்தப் பகுதிகளில் 2004ஆம் ஆண்டுதான் அடுத்த அகழாய்வு நடத்தப்பட்டது.
அந்தச் சமயம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தைய நாகரீகமாக ஆதிச்சநல்லூர் நாகரீகம் விளங்கியது என ஆங்கில செய்தித்தாளில் கட்டுரை எழுதப்பட்டது.
அதன்பிறகே அனைவருக்கும் ஆதிச்சநல்லூர் நாகரிகம் குறித்து அகழாய்வு நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு மெட்ராஸ் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆதிச்சநல்லூர் நாகரீகம் குறித்த ஆய்வு தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டியும், அதன் அருகில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி பொருள்களை ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகலாய்வு நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கு தாக்கல் செய்தேன்.
மிக பழமையான நாகரிகம் என கருதப்படுகிற கீழடி நாகரிகம் 2,300 ஆண்டுகள் பழமையானது. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு 2,900 ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கீழடி நாகரிகத்தைக் காட்டிலும் பழமையான நாகரீகமாக ஆதிச்சநல்லூர் நாகரீகம் விளங்குகிறது.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரும் பொழுது உலக நாகரிகத்தின் தொட்டில் ஆதிச்சநல்லூர்தான் என்பது உலக மக்களுக்குப் பறைசாற்றப்படும். இதன் மூலம் தமிழர்களும் தமிழ்நாடும் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கும் என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
பாண்டிய மன்னன் காலத்தில் கொற்கை துறைமுகமானது மிகவும் பெயர் பெற்று விளங்கி வந்தது. தாமிரபரணி ஆற்றுப்படுகை வழியே கொற்கை துறைமுகத்திற்கு படகுப் போக்குவரத்தும் நடைபெற்றிருக்கிறது.
பண்டைய காலத்தில் கொற்கை துறைமுகத்தில் கடல்வழி வாணிபத்தை தமிழர்கள் மேற்கொண்டுள்ளனர். முதுமக்கள் தாழியில் பட்டு துணியினால் சடலங்கள் புதைக்கப் பட்டிருக்கின்றன.
இதேபோல எகிப்தில் மம்மி என்று சொல்லும் சடலங்களை பதப்படுத்தும் பெட்டியிலும் பண்டைய கால மக்கள் பட்டுத்துணியால் சடலங்களை சுற்றி வைத்து புதைத்துள்ளனர்.
எகிப்து நாட்டிற்கு இங்கிருந்து கடல்வழி வணிகமாக தமிழர்கள் பட்டு துணிகளை அனுப்பி இருக்கக்கூடும். மேலும் சாதி, மதம் குறித்தான எந்த வித சின்னங்களும் அகழாய்வு மேற்கொண்டதில் காணப்படவில்லை.
ஆதிச்சநல்லூரில் பெரியவர்களுக்கு பெரிய தாழிகள் எனவும் சிறியவர்களுக்கு சிறிய தாழிகள் எனவும் தனித்தனியே பிரித்துவைத்து பட்டு துணிகளால் சடலங்களை சுற்றி வைக்கும் வழக்கத்தை அக்கால மக்கள் கொண்டுள்ளனர்.
எனவே ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பின்னர் கொற்கை பகுதியிலும் தொல்லியல் துறை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஆதிச்சநல்லூர் பொருட்கள் கிமு 905ஆம் ஆண்டைச் சேர்ந்தவை: மத்திய அரசு தகவல்!