பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பு காரணமாக நேற்று முன் தினம் (மே.17) இரவு 11 மணியளவில் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது உடலுக்கு நேற்று (மே.18) பிற்பகல் ஒரு மணியளவில் புதுச்சேரி அரசு சார்பில் காவல் துறையினரின் மரியாதை அளிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது உடலுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, கி.ரா உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இடைசெவலில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று (மே.19) மதியம் 12 மணிக்கு அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.