தூத்துகுடி: கிராம சபை கூட்டத்தின் போது இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணை சாதி பெயரைச் சொல்லி செருப்பை கொண்டு அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சாதி, மத பிரச்னைகள் அவ்வப்போது எழுந்துவரும் நிலையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தூத்துகுடியில் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நேற்று (15.08.2023) தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், கிராம சபை கூட்டங்கள் (Gram Sabha) நடந்தன. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே துரைச்சாமிபுரம் கிராமத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வரும் அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கவிதா(40) என்பவர் கூட்டத்திற்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்கூட்டத்தை மறைக்கவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது ..ஜெயக்குமார்
இந்நிலையில் கூட்டத்தில் தனது பணியில் உள்ள பிரச்னை பற்றி கவிதா பேசிக் கொண்டிருந்தபோது, அப்பணியில் முன்பு பணியாற்றிய ரேவதி என்பவர், கவிதாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அது மட்டுமின்றி, அவரது சாதியை பற்றி இழிவாக பேசியவாறு திடீரென தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த கவிதா, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பசுவந்தனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் மனுவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, ரேவதி காவல் நிலையத்தில் ஜாமீன் பெற்றதால், போலீசார் அவரை விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சமீப காலமாக தமிழகத்தில் சாதி ரீதியான பிரச்னை ஓடிக்கொண்டு இருக்கையில் தற்போது இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Vao muruder case: லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு ஆக.21ல் தொடக்கம்-தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்!