தூத்துக்குடி தென்பாகம் அடுத்துள்ள சாந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. இவர், ஏப்ரல் 19ஆம் தேதி வீட்டை பூட்டி வீட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பியது வீட்டின் பீரோவை உடைக்கப்பட்டு, அதிலிருந்து ரூ. 1 லட்சம் பணம், 6 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து முத்துலெட்சுமி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சம்பவ நாளன்று (ஏப்.19) காலை சுமார் 11 மணியளவில் வீட்டை பூட்டி சாவியை வீட்டு சுற்றுச்சுவரில் (காம்பவுண்ட்) வைத்துவிட்டு, முன்வாசலை மட்டும் பூட்டி வெளியே சென்றார்.
வெளியே சென்று திரும்பிய சிறிது நேரத்துக்குள் யாரோ ஒருவர் வீட்டுச் சாவியை திருடி, பீரோவை உடைத்து அதிலிருந்த பணம், நகையை திருடிச்சென்றுள்ளனர். சம்பவத்தின் போது பதிந்த கைரேகைகளை வைத்து ஆய்வு மேற்கொண்டதில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்பவரின் மனைவி செல்வியின் (27) கைரேகை என்று நிரூபணமானது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முத்துலெட்சுமி வெளியே செல்வதைக் கவனித்து, மாடிப்படி வழியாக உள்ளே இறங்கி பீரோவை உடைத்து திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து செல்வியை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோதிரம், கைச்செயின், கம்மல் உள்பட 6 பவுன் தங்க நகைகள், ரூ. 1லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.