நீலகிரி: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், 4 மாவட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகள் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். மேலும், இந்த மீட்புப் பணிகளுக்காக நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவப் படையிலிருந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் அடங்கிய தனிக்குழு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்ற ராணுவ வீரர்கள் திருச்செந்தூர், கருங்குளம் உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவித்த 24க்கும் மேற்பட்டவர்களை உயிருடன் மீட்டனர். மேலும் அப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 550 நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை ராணுவ வீரர்கள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து மழை வெள்ளம் காரணமாக கருங்குளம், திருச்செந்தூர் சாலை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் ராணுவ வீரர்கள் சாலையைச் சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெலிங்டன் ராணுவ வீரர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ரத்து!