விளாத்திகுளம் அருகே அயன் கரிசல்குளத்தில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பனை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பரப்புரையைத் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிமுக சார்பில் அடிமட்டத் தொண்டன் நின்றால்கூட பல ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு தமிழகத்தில் புற்றீசல் போல் ஏராளமான கட்சிகள் உருவாகியுள்ளன. மழைக்காலங்களில் ஈசல் தோன்றும். ஆனால் தோன்றிய வேகத்தில் காணாமல் போய்விடும். இந்தத் தேர்தலோடு அதுபோன்ற கட்சிகளுக்கெல்லாம் முடிவு வந்து விடும்.
மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இதனை செந்தில் பாலாஜி போன்றவர்கள் நிரூபித்துவிட்டனர். இதில் நான் யாரையும் திரித்துக் கூறவில்லை. பொதுவான நடைமுறையைக் கூறினேன். தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அவரது வெற்றிக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரவேன் என்றுதான் கூறியிருந்தேன். இதில் நான் யாரையும் மையப்படுத்தி பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இன்றைக்கும் அந்த நண்பர் (முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்) சுயேட்சையாகப் போட்டியிடப்போவதாகப் பேட்டி அளித்துள்ளார். இன்னமும் காலம் கடந்து போகவில்லை. வேட்புமனு தாக்கல், வாபஸ், இறுதிப் பட்டியல் வரை நாங்கள் பொறுத்திருப்போம்.
எனவே, இந்த நிமிடம் வரை அவர் என்ன கூறினாலும் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. நாங்கள் அவரை சகோதரராகவே பார்க்கிறோம். அதிமுக என்பது ஒரு கூட்டுக் குடும்பம். அந்த குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வரும். தேர்தல் நேரத்தில் மனக்குறை அடைவார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக மீண்டும் அவர் எங்களுடன் வந்து பணியாற்றுவார் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வந்தவுடன் ன்ன நிலைப்பாடு வருகிறதோ அதற்கு தகுந்தார் போல வியூகம் அமைத்து வெற்றி பெறுவோம்" என்றார்.