தூத்துக்குடி மாநகராட்சி சிப்காட் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டானியம் ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு தாது மணலிலிருந்து தாதுக்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு துறைசார்ந்த உபயோகத்திற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர், கனிம வளத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த டைட்டானியம் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ’இல்மனைட்’ தாது மணலை மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலின்றி பயன்படுத்தக்கூடாது என அலுவலர்கள் அறிவுறுத்திச் சென்றதாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த ஆலையின் மேலாளர் பொன்சேகர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”இல்மனைட் மணலை சட்டப்படி இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்குத் தேவையான எல்லா ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. இல்மனைட் தாதுப்பொருள் முழுவதுமாக தடையின்றி ஏற்றுமதி செய்ய தகுந்த பொருளாகும். அதை தடை செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எங்களிடம் பணம் பறிப்பதற்காக தனிநபர் ஒருவர் கனிம வளத்துறை துணை இயக்குநர் தங்க முனியசாமி மூலமாக தங்களுக்கு அழுத்தம் தருவதாக குற்றஞ்சாட்டினார்.
ஆகவே தனிநபர் ஒருவரின் தூண்டுதலின் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடி முற்றிலும் தவறானது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாங்கள் நாடவுள்ளோம். இல்மனைட்டை பயன்படுத்துவதன் மூலமாகத்தான் ஆலை இயங்கமுடியும். இல்லையெனில் ஆலையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்பட்ட 1,200 மதுபாட்டில்கள்!