தூத்துக்குடி: நீட் தேர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கல்லூரியில் மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட குழு தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இயற்றியுள்ள நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர் கார்த்திக் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "நீட் தேர்வினால் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். தற்கொலை என்பது இதற்கு தீர்வல்ல. எனவே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இயற்றியுள்ள சிறப்பு தீர்மானத்திற்கு தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஆளுநர் தனது முதல் கையெழுத்தாக நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிராக இயற்றிய சிறப்பு தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க கோரியும் இன்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் தூத்துக்குடியில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்தால் மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும்" என்றார்.
இதையும் படிங்க: எழுவர் விடுதலை... நீட் தேர்வு - சட்டப்போராட்டம் தொடரும் என அமைச்சர் உறுதி