தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், மணிகண்டன், ராஜலட்சுமி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, நேற்று கீழத்தட்டப்பாறை பகுதியில் வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "பொதுமக்களுக்காக அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு கொடுக்கிறது. ஆனால், அதனை திமுக தடுக்கிறது. மக்களுக்கு கொடுக்கின்ற கட்சிக்கு வாக்குகளை அளியுங்கள். கெடுக்கின்ற கட்சியை ஒதுக்குங்கள். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஓவ்வொரு நாளும் ஆதரவு பெருகி வருகிறது. மகத்தான வாக்கு வித்தியாசத்தில் மோகன் வெற்றி பெறுவார். இங்கு முதலமைச்சர் பரப்புரைக்கு பிறகு அப்பகுதி மக்கள் மிகுந்த எழுச்சியோடு உள்ளனர். இப்பகுதி பிரச்னைகள் அனைத்தும் ஆளும் கட்சியால் தீர்க்கப்படும்" என்றார்.