தூத்துக்குடி: கழுகுமலை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த காளிராஜ் என்பவரது மகன் ஹரிபிரசாத் (16). இவா் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்து வருகிறாா். வீட்டின் அருகே காளியம்மன் கோயில் பகுதியில் ஹரிபிரசாத் அமா்ந்து இருந்தபோது, அங்கு வந்த சிலா், அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஹரிபிரசாத், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபிரசாத்தை தாக்கியதாக கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட 5 பேரை தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவா்களை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவன் ஹரிபிரசாத்தை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆறுதல் கூறினார். பின்னர் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், “கழுகுமலை பள்ளி மாணவர் ஹரிபிரசாத் வீட்டுக்கு வந்து தாக்கியதாக 6 பேர் குறிப்பிடப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஹரிபிரசாத்துக்கு நரம்பியல் நிபுணர் கொண்டு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஹரிபிரசாத் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட கூடிய மனப்பாங்கு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. இந்த விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது என்ற நோக்குடன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹரிபிரசாத் மீது செய்யப்பட்ட வழக்கு மறுபரிசீலனை செய்து தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் இது போன்ற நடவடிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு மதவெறி அரசியலை விதைப்பதை ஜனநாயக கட்சிகள் சுட்டிக்காட்டி கண்டித்து வருகின்றன. சாதி உணர்வுகளை பரப்புவதை கட்டுப்படுத்த வேண்டும்.
நீதிபதி சந்துரு தலைமையிலான ஆணையம் நாங்குநேரி பிரச்னையோடு நின்று விடாமல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிலவும் சாதியை வன்மம் தொடர்பான பரப்புரைகளை ஆய்வு செய்து வேண்டும். தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.