தூத்துக்குடி: கோவில்பட்டியிலுள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12ஆவது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. நேற்றிரவு (மே 29) இறுதிப்போட்டி நடந்தது.
முன்னதாக மாலை 4.30 மணிக்கு 3, 4ஆவது இடங்களுக்கான போட்டி நடந்தது. இதில், ஹாக்கி ஹரியானா அணியும், ஹாக்கி அசோசியேஷன் ஆப் ஒடிசா அணியும் மோதின. போட்டியில், ஹரியானா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று 3ஆவது இடத்தைப் பிடித்தது. இந்த அணியைச் சேர்ந்த விகாஷ் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டியில் உத்தரப்பிரதேசம் ஹாக்கி அணியும், சண்டிகர் அணியும் மோதின. இதில், உத்தரப் பிரதேசம் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு கோவில்பட்டியில் நடந்த 11ஆவது தேசிய ஜூனியர் ஹாக்கிப்போட்டியில் உத்தரப்பிரதேசம் அணிதான் சாம்பியன் வென்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி. தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்ற உத்தரப்பிரதேசம் அணிக்கு கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சிவகாசியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!