தூத்துக்குடி மாவட்டத்தில், கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், ரூ.22.38 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 15 ஆயிரத்து 792 பயனாளிகளுக்கு ரூ.37.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வல்லநாடு அருகே குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியத்தின் மனைவி புவனேஸ்வரிக்குப் பள்ளி கல்வித் துறையில், அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும், இழப்பீடாக 50 லட்ச ரூபாய் காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கரோனா தடுப்பு கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி," மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை குறைத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தான் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டதால் தான் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்ததாலும், நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டும் காய்ச்சல் அறிகுறிகள் விரைவாக சோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரத்தறை மூலமாக எடுக்கப்பட்ட போர்க்கால அடிப்படையின் பயனாக படிப்படியாக நாம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கரோனா தொற்றால் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.39 கோடியில் 19 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மதிப்பில் நேரியல் முடுக்கி சிகிச்சை மையத்தைத் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு இருதய சிகிச்சைக்காக கேத் லேப் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக விமான விரிவாக்கத்துக்கு 600 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது போக, கூடுதலாக 100 ஏக்கர் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காகப் பயணிகள் யாத்திரை கட்ட திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
90 ஊரகப் பகுதிகளுக்கு, 17 கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கிப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், பல வளர்ச்சி பணிகளை டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். தூத்துக்குடி மாநகராட்சியில், 995 கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன.
95 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவும், குடிமராமத்து பணியின் கீழ் 196 குளங்கள் 7.5 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டுள்ளது. 10.6 கோடி ரூபாயில் வேளாண் முதன்மை பதப்படுத்தும் நிலையம் திருவைகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நலன் பயக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 15 நாட்களில் 52 கோடி பயிர் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 82 கோடி மதிப்பிலான பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் முடிக்கப்பட்டுள்ளது. பெரிய தாழையில் கடல் அரிப்பைத் தடுக்க 30 கோடி ரூபாயில் திட்ட விரிவாக்கம் செய்துள்ளோம். நலத்திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கனிமொழி எம்பிக்கு எதுவும் தெரியாது.
அவருக்கு நலப்பணிகள் குறித்து தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ரூ.7000 கோடியில் தூத்துக்குடி துறைமுகம் நவீனமயமாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நான் சிறு வயது முதலே விவசாயம் செய்து வருகிறேன். மு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. விவசாயத்தை பற்றி தெரியாமல் கருத்துக் கூறி விவசாயிகளை மு.க. ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறார். என் உழைப்பை பரிசோதனை செய்து மு.க.ஸ்டாலின் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஆனால் எந்த தொழிலும் தெரியாமல் அரசியல் பேசி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
எனது ஆட்சிகாலத்தில் மட்டும், புதிதாக 11 கல்லூரிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்திற்கு முழு காரணம் மு.க.ஸ்டாலின் தான்.
தொழிற்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, இரண்டாம் கட்டமாக ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்க அவரே ஒப்புதல் வழங்கினார். இதற்காக ரூ.1500 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதலும் வழங்கியவர் மு.க.ஸ்டாலின். ஆகவே ஸ்டெர்லைட் சம்பவத்தில் மு.க.ஸ்டாலின் பச்சை பொய் பேசி வருகிறார். மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இவை மாலை நேரத்தில் திறக்கப்படும். மருத்துவர் செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர்" என்றார்.