தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 26 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதில் ஒரு பெண் சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். மீதமுள்ள 25 பேரில் ஐந்து பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும், 20 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இவர்களில் காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மருத்துவராகப் பணியாற்றிவரும் மருத்துவர் பாஷி கடந்த மார்ச் 30ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இவர்கள் இருவரும் கடந்த 16 நாள்களாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் தற்போது பூரண குணமடைந்தனர்.
இதையடுத்து இருவரையும் பழங்கள் கொடுத்தும், கைகளைத் தட்டியும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையிலான குழுவினர் நேற்று வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "கரோனாவிலிருந்து மீண்ட இருவரும் தங்களை 15 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஆதரவற்றோர், முதியோருக்கு தங்குமிடம், உணவு வழங்கிய ஆட்சியர்!