தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணும்; கருங்கடல் பகுதியைச் சேர்ந்த சாத்தராக் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் கடந்த 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக இருவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் காணவில்லை எனப் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, சாத்தான்குளம் போலீசார் புகாரைப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், இன்று 12-ம் தேதி மாலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சாத்தராக் மற்றும் முத்துமாரி தம்பதியினர் திடீரென காவல் நிலையம் வந்து தங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும், பின்னர் 4 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறினர்.
இதனடிப்படையில், காவல் துறையினர் இருவரின் குடும்பத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்த இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பத்தின் பேரில் வாழ அனுப்பி வைத்தனர்.
மேலும் பேய்குளம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சேர்மலட்சுமி என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 8-ம் தேதி தங்களது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். அது குறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் புகாரைப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், இருவரும் இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து பெற்றோருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
உடனே போலீசார் இரு தரப்பினரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இருவரும் மேஜர் என்பதால் சாத்தான்குளம் போலீசார் அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: Minister உதயநிதி: விமர்சனத்தை பொருட்படுத்த தேவையில்லை - அமைச்சர் அன்பில்