தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் திங்கள்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்துவந்தது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் பொதுமக்கள் தங்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு படையெடுக்க தொடங்கினர்.
இதனால் அரசின் கரோணா விதிமுறைகளை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாவட்டம் தோறும் மக்கள் குறைதீர் கூட்டத்தை அந்தந்தப் பகுதிகளுக்கு உள்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் காணொலி மூலம் நடத்த ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (நவ. 30) முதல் மக்கள் குறைதீர் கூட்டம் வாரம்தோறும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி மனு அளிக்க வந்திருந்தனர். அவற்றை காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதுபோன்று கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையபுரம், கயத்தார், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் காணொலி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க... தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!