தூத்துக்குடி மாவட்டம் சின்ன கடைத்தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். கடந்தி சில மாதங்களாகவே இவருக்கும் இவரது தம்பி சிம்சனுக்கும் குடும்ப சொத்தைப் பிரித்துக்கொள்வதில் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன் தனது தம்பி என்றும் பாராமல் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சிம்சனின் தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டு ஓடியது. ரத்தப் போக்கின் காரணமாக சில நிமிடங்களில் மயங்கி விழுந்த சிம்சன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிம்சனின் உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டபிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தச் சூழலில் சொத்து தகராறில் அண்ணனே தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.