தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவிற்குப் பிறகு நடைபெற உள்ள முதல்தேர்தலாகும். இதில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அதிமுகவும், ஆட்சியைப் பிடிக்க திமுகவும் கூட்டணி வைத்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இதில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இந்த இரண்டுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி மக்களவைத்தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டிபிஎஸ் பொன் குமரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயல்வீரர் கூட்டம், வேட்பாளர் அறிமுக விழா நேற்று தூத்துக்குடி ராஜ் திரையரங்கு அருகில் உள்ளதனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு, தூத்துக்குடி மக்களவைத்தொகுதி வேட்பாளர் டிபிஎஸ் பொன் குமரன், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்ஆகிய தொகுதிப் பொறுப்பாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர் திவ்யா பாரதி, கட்சி தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.