தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள மீனவ பெண்கள், தங்களது உயிரைத் துச்சமென எண்ணி கடலுக்குச் சென்று மீன் பிடித்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து மட்டும் வாழ்வாதாரம் பெற்று வருவது என்பது சாதாரண விஷயமல்ல!. ஆம்... மீன்பிடித்தல் என்பது பூமியில் உள்ள கடினமான வேலைகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும், தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்கள் கடலுக்குச் செல்வதன் மூலம் அபாயகரமான தொழிலுக்குப் பழகிவிட்டதாகவே கூற வேண்டும்.
தூத்துக்குடியில், மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஆண்கள் கடல் தொழிலுக்குச் செல்லும் போது, அந்த குடும்ப பெண்கள் எப்போது திரும்ப வருவர் என காத்துக் கொண்டு இருப்பார். சில பெண்கள் வேலைகள் மற்றும் இதர பணிகளுக்குச் செல்வர். ஆனால், தூத்துக்குடியில் உள்ள விவேகானந்த நகரில் பெண்களும் தங்கள் உயிரையே பணயம் வைத்து கடலில் மீன் பிடித்து வருவது எளிதான காரியம் அல்ல.
தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் அருகே உள்ளது விவேகானந்த நகர் கடற்கரை பகுதி, இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலே மீன் பிடித்தல் தான், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனர். காலை 4 மணிக்கு விழித்தெழுந்து பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு உணவு தயார் செய்து வைத்து விட்டு, 5:30 மணியளவில் ஆண்களுடன் கடலுக்குச் செல்கின்றனர். காலையில் தொடங்கும் இந்த மீன் பிடி தொழிலானது, 9 மணி வரை தொடர்கிறது.
அதன் பின் மீனைப் பிடித்து மீன் ஏல கூடத்தில் மீன்களை விற்கின்றனர். சில நேரங்களில் மதியம் வரை தொடர்வதாகவும் கூறுகின்றனர். மீன் பிடி பெண்கள், கிடைக்கும் மீன்களைக் கரைக்குக் கொண்டுவந்து, மீன் சந்தைகளில் விற்கும் இவர்கள் வாழ்க்கையே போராட்டம் மிகுந்தவையாக இருப்பதாகக் கூறுகின்றனர். இவர்கள் பிடிக்கப் போகும் பைபர் படகு பெயர்கள் கேட்டவுடன் சிலிர்த்தது, குட்டிபுலி, தங்கமயில், பாகுபலி, கடல் சிங்கம், வீர பெண்மணி என்ற பெயர் கொண்ட படகுகளாகும். இந்த படகில் சென்று தான், கொந்தன் மீன், நெத்திலி மீன், கோலா மீன், பண்ணா மீன், ஊளி மீன், கிளி மீன், கெளுத்தி மீன் போன்றவற்றைப் பிடித்து வருகின்றனர்.
இதனை, மீனவ பெண்கள் முழுநேர தொழிலாக உயிரைப் பணயம் வைத்து மீன் பிடித்து வருகின்றனர். உயிரைப் பணயம் வைத்து என்று கூறுவது எதனால்! என்றால். படகிலிருந்து கடலில் வலைகளை வீசி அதன் பின் அதனைக் கடினமாக இழுக்க வேண்டும். அப்படி கவனமாக இழுக்காத வண்ணம் விட்டு விட்டால் அவர்கள் கடலில் விழும் நிலை ஏற்படும். இவ்வாறு உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல் இவர்கள் எடுக்கும் அந்த மீனானது சந்தைகளில் மிகக் குறைந்த அளவே விற்பனை ஆகிறதாம். அதனால் மனவேதனையும், தினக்கூலி 200, 300 ரூபாயே கிடைக்கிறது. மேலும், மீன் பாடு இல்லை என்றால் அந்த நாள் ஏமாற்றத்துடன் தான் வர வேண்டும் என்று கவலையுடன் கூறுகின்றனர் அந்த மீனவ பெண்கள்.
இது குறித்து மீன் பிடிக்கச் செல்லும் முத்து மாரி நம்மிடையே கூறுகையில், "கடந்த 3 வருடமாகக் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று வருகிறேன். வீட்டுச் சூழ்நிலை, கஷ்டம் அறிந்து கடலுக்குப் போய் வருகிறேன். இதனால் எனது கணவருக்கு உதவியாக இருக்கிறது. சில நேரங்களில் மீன்கள் வரத்து அதிகமாக இருக்கும். சில நேரங்களில் மீன்கள் வரத்து இருக்காது. தினமும் ஒரு வித பயத்துடனே வழக்கைப் போய்க் கொண்டு இருக்கிறது" எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து, 15 வருடமாக மீன் பிடிக்கச் செல்லும் குமுதம் கூறுகையில், "சிறு வயதிலிருந்தே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று வருகிறேன். கணவர் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் கடல் தொழில் தான் செய்து வருகிறேன். சிறு வயதில் ஆழ் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தேன். ஆனால் தற்போது வயது முதிர்வின் காரணமாக ஆழ் கடல் செல்வதில்லை. கடலுக்குள் மீன் பிடிக்க செல்வது மிக கடினமான ஒன்று தான்" என்று கூறினார்.
இந்நிலையில் ஈடிவி பாரத் செய்தி சேகரிக்கச் சென்ற நேரத்தில் மீன் வரத்து இல்லாததால் மிகவும் கவலையுடன் அன்று உணவு கூட அருந்தாமல், தேநீர் மட்டுமே அருந்தி இருந்த அப்பெண்களின் நிலைமையைப் பார்த்தவுடன் இனம் புரியாத ஒரு மனக் கசப்பு தோன்றியது. இப்பெண்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எப்போது முடிவு எட்டும் என உங்களுடன் நாங்களும் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியின் கடந்தாண்டு வசூல்? - நிலுவைத் தொகை வசூலிக்க புதிய திட்டம்!